Suraj Venjaramoodu: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Suraj Venjaramoodu: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Published on: September 19, 2026 at 12:45 pm
சென்னை, செப்.19, 2026: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா உள்ளிட்டோர் முதல் பாகத்தில் நடித்த கதாபாத்திரங்களிலேயே மீண்டும் நடிக்கின்றனர். இந்நிலையில், படத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் பணியை படக்குழு தொடங்கியுள்ளது.
அதன் முதல் அறிமுகமாக மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, ‘திலீப்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சூரஜ் காரில் இருந்து இறங்கி சிகார் புகைத்தபடி நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் அவர் முற்றிலும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தில் சூரஜின் கதாபாத்திரம் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூரஜ் வெஞ்சாரமூடு, இதுவரை 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ள அவர், கேரள மாநில திரைப்பட விருதில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை மூன்று முறை பெற்றுள்ளார். மேலும், ‘பேரறியாதவர்’ (Perariyathavar) திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2013ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார். இந்த ஆண்டு வெளியான மோகினியாட்டம் (Mohiniyaattam) திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு நெல்சன் திலீப்குமார் மீண்டும் எழுத்தாளர் மற்றும் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா ஆகியோருடன் மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்திலும் இவர்கள் சிறப்பு தோற்றங்களில் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுகங்களை வரும் நாட்களில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரஜ் வெஞ்சாரமூட்டின் ‘திலீப்’ கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ள நிலையில், படத்தின் கதை மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இதை பண்ண முடியுமா? காலா ராதிகா ஆப்தே சந்தித்த மோசமான சினிமா அனுபவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com