‘உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க கூடாதா?’ – தி.மு.க.விடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

SC Rejects DMK Plea: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சந்திக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

Published on: July 7, 2026 at 2:09 pm

புதுடெல்லி, ஜூலை 7 2026: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஜூலை 10-ஆம் தேதி நேரில் சந்தித்து அரசு நலத்திட்ட ஆணைகள், கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் மற்றும் பிற நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாட்சிகள் மீது தாக்கம் ஏற்படக்கூடும் என்று கூறி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார்.

சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கக்கோரியும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் ஆலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக ஆட்சியில் பதிவான வழக்கில் விஜய் குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள். உங்கள் சண்டைகளை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்.

“முதலமைச்சருக்கு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?”, “உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சந்திப்பது எப்படி சாட்சிகளை பாதிப்பதாகக் கருதப்படும்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல தடையில்லை. முதலமைச்சரின் பேச்சு கருத்து சுதந்திரம். இந்த மனுவை திரும்பப் பெற்று, சட்டப்படி கிடைக்கும் பிற தீர்வுகளை நாடலாம்; இல்லையெனில் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார். அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வேறு சட்டரீதியான தீர்வுகளை நாடுவதற்கான சுதந்திரத்துடன் மனுவை திரும்பப் பெற்றதாக பதிவு செய்து வழக்கை முடித்துவைத்தது.

இதையும் படிங்க : பெரம்பூர் வெற்றிக்கு எதிரான வழக்கு: முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com