புதுடெல்லி, ஜூலை 7 2026: கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (TVK) பொதுக்கூட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூருக்கு சென்று உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டிருப்பது குறித்து தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதையும், விசாரணை முடியும் வரை சாட்சிகளை பாதிக்கக்கூடிய வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளுவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் கரூர் பயணம் நடைபெறவிருப்பதால், சாட்சிகளின் வாக்குமூலத்தில் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அக்மதி உச்சநீதிமன்றத்தில் அவசரமாக பட்டியலிட கோரிய நிலையில், நீதிபதிகள் அந்த கோரிக்கையை ஏற்று இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் வழங்கினர். இதன் மூலம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணை நடைபெறும் சூழலில் முதலமைச்சரின் திட்டமிடப்பட்ட பயணம் குறித்த சட்டரீதியான விவாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த மனுவின் மீது உச்சநீதிமன்றம் வழங்கும் உத்தரவு, முதலமைச்சர் விஜயின் கரூர் பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா, அல்லது அதற்கு ஏதேனும் நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : ‘ம.தி.மு.க. உறுப்பினரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது பேரம்தான்’.. வைகோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்