திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை.. தமிழக பக்தர் நேர்த்திக்கடன்!
Tirupati Gold Donation: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் பக்தர் 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார். 45 வகையான நகைகளாக வடிவமைக்கப்பட்ட இந்தக் காணிக்கை, தனிநபர் ஒருவர் வழங்கிய மிகப்பெரிய காணிக்கையாக இருக்கும் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை, நவ.26, 2026: ஆந்திர மாநிலம் திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார். மொத்தம் 9 தொகுப்புகளாக, 45 வகையான நகைகளாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. தனிநபர் ஒருவர் ஏழுமலையானுக்கு வழங்கும் மிகப்பெரிய காணிக்கையாக இது இருக்கும் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு, தனது முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்று அந்தப் பக்தர் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கிய அவர், வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்றதன் மூலம் ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது செல்வத்தின் ஒரு பகுதியை சமூக நலப் பணிகளுக்குச் செலவிடவும், ஏழுமலையானுக்கு அளித்த நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி, பெட்டி பெட்டியாகத் தங்க நகைகளைக் கொண்டு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். பக்தரின் பெயர் வெளியிடப்படவில்லை.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.