Dr Ramadoss : “மூன்று மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க கூடாது” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss : “மூன்று மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க கூடாது” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Published on: May 28, 2026 at 2:52 pm
சென்னை, மே 28, 2026: மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க கூடாது என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறுகிய காலத்திலேயே புதிய மொழியை கட்டாயப்படுத்துவது மாணவர்களின் கல்விச் சுமையையும், மன அழுத்தத்தையும் அதிகரிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குழப்பம்- எதிர்ப்பு
தொடர்ந்து, “ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 9ஆம் வகுப்பிற்கு மூன்றாவது மொழி, மூன்று ஆண்டுகளில் கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அதனை மே 15ஆம் தேதி திருத்தி, இந்த கல்வியாண்டிலிருந்தே அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது” எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கிடையில், “மொழி என்பது கற்றலின் கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளமும், பண்பாட்டின் வெளிப்பாடும் ஆகும். அதனால் மொழிக் கொள்கை என்பது மக்களின் விருப்பத்தையும், மாநிலங்களின் தனித்துவத்தையும் மதித்து அமல்படுத்தப்பட வேண்டும். ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை நாடு முழுவதும் திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்” எனத் தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், “எனவே, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து, மாநில மக்களின் உணர்வுகளையும் கல்வி உரிமையையும் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பா.ம.க எதிர்க்கும்
தொடர்ந்து, “தமிழகத்தில் மூன்றுமொழிக் கொள்கையை திணிக்கும் எந்த முயற்சியையும் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பை தொடங்குக.. மருத்துவர் அன்புமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com