DVAC Director Appointment: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
DVAC Director Appointment: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Published on: October 12, 2026 at 1:26 pm
சென்னை, அக்.12, 2026: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக, கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அவர், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி, அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஏ. அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பதவி முழுநேர அதிகாரி இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து, துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஐஜியான சி. மகேஸ்வரி கூடுதல் பொறுப்பாக இயக்குநர் பணியைக் கவனித்து வந்தார். இந்நிலையில், தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலர் ஏ. கார்த்திக் வெளியிட்ட உத்தரவின்படி, காலியாக இருந்த இயக்குநர் பதவிக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேம் ஆனந்த் சின்ஹா தாம்பரம் மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பு வகிப்பதற்கு முன்பு, காவல்துறையின் பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். 2001-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தமிழக காவல்துறையில் இணைந்த அவர், தேவகோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் முக்கியப் பிரிவுகளில் பணியாற்றினார்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல இயக்குநர், சென்னை காவல்துறையின் தெற்கு கூடுதல் ஆணையர், மதுரை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார். இதற்கிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என அரசு தெரிவித்துள்ளது. ஊழல் புகார்கள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழுநேர இயக்குநர் நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : தேர்தல் மனுக்கள், சீல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு.. அர்ச்சனா பட்நாயக்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com