இளையராஜா இசை மையம் திறப்பு.. அக்.11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி!
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை வருகிறார். அவரது பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘IITM–Maestro Ilaiyaraaja Centre for Music Learning and Research’ இசை மையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.
சென்னை, அக்.4, 2026: பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை வருகிறார். அவரது பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘IITM–Maestro Ilaiyaraaja Centre for Music Learning and Research’ இசை மையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.
இசைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சியை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் வகையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இசை தொடர்பான திறன் மேம்பாடு மற்றும் சான்றிதழ் படிப்புகளுடன், இசைக்கருவிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அக்டோபர் 11-ஆம் தேதி காலை 10.55 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வந்தடைய உள்ளார். தொடர்ந்து பூந்தமல்லி செல்லும் அவர், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி–வடபழனி இடையிலான 14.64 கிலோமீட்டர் வழித்தடத்தை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் செய்து, அங்கிருந்து சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களை சந்திப்பதுடன், சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிட உள்ளார். இந்த மையம் மனித மூளையை உயர் தெளிவுத்திறனில் வரைபடமாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, மூளைத் தண்டுவடத்தின் செல்கள் அளவிலான முப்பரிமாண வரைபடமான ANCHOR உருவாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இளையராஜா இசை மையத்துக்கான அடிக்கல் 2024-ஆம் ஆண்டு நாட்டப்பட்ட நிலையில், இசை மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் முக்கிய மையமாக இது செயல்படும் என சென்னை ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.