கர்நாடகாவில் இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர் நீக்க முயற்சி.. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
Karnataka SIR Voter List Row: கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயன்றதாக பா.ஜ.க. நிர்வாகிகள் மீது புகார்கள் எழுந்துள்ளன.
பெங்களூரு, அக்.3, 2026: கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயன்றதாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெலகாவி மாவட்டத்தில் பாஜக தலைவர் ரவி பாட்டீல் உள்ளிட்டோர் மீது, 198 முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை படிவம் 7 மூலம் நீக்க முயன்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெலகாவி வடக்கு தொகுதியில் வாக்குச்சாவடி நிலை முகவராக பணியாற்றிய மீராசாப் சனாடி அளித்த புகாரின் அடிப்படையில் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது புகாரின்படி, ரவி பாட்டீல், சங்கர் பீரப்பா நாயக், பிரசாந்த் தீபக் முண்டினமணி உள்ளிட்டோர் 20 முதல் 25 பேருடன் இணைந்து, 198 வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக போலி ஆவணங்களுடன் படிவம் 7 விண்ணப்பங்களை தாக்கல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களில் புகார்தாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று பீதர் மாவட்டத்தில் 3,244 வாக்காளர்களின் பெயர்கள், அவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் அல்லது அங்கு இல்லாதவர்கள் எனக் குறிப்பிட்டு படிவம் 7 மூலம் நீக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்டோபர் 1ஆம் தேதி 32 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூருவிலும் சமூக ஆர்வலர் சையத் ஹசரத் உல்லா அளித்த புகாரின் அடிப்படையில், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 29 பேரின் பெயர்களை நீக்க போலியான தகவல்களுடன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றச்சதி உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.