நிவாரணம் ஒன்றுதான் தீர்வா ; மு.க. ஸ்டாலினுக்கு விஜய் நேரடி கேள்வி

நிவாரணம் ஒன்றுதான் தீர்வா என மு.க. ஸ்டாலினுக்கு விஜய் நேரடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Published on: December 3, 2024 at 8:44 pm

Updated on: December 3, 2024 at 9:06 pm

Vijay’s question to M.K.Stalin | தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல? மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம்.

ஆயினும் மக்கள் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்து நிற்பதே நமது மக்களரசியல் நிலைப்பாடு என்பதால் இதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா? அந்த நேரத்துக்கான தீர்வைத் தந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்? மழை வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகமான தலையாய கடமை, முதலில் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது.

ஆனால் ஆட்சியாளர்கள் இதை முழுவதுமாகவே மறந்துவிடுகின்றனர். மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது. எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு.

எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும். இந்த இயற்கைப் பேரிடர்க் காலத்தில், தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நம் தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

கடந்த பல வருடங்களாக நாம் நற்பணி மன்றமாக, மக்கள் இயக்கமாக இருந்தபோது, இயன்ற அளவில் நம் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தோம். மக்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தோம். நம் சேவை உணர்வால் அவர்களோடு உறவாகப் பழகியவர்கள் நாம். என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்களாகிய நீங்கள், உண்மையான மக்கள் பணி செய்யும் நேரம் இதுவே என்பதை ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தி வருகிறீர்கள்.

அவ்வகையில் இந்தப் பேரிடர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை, பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும் நீங்கள் களத்தில் நின்று இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். மேலும் வீடு வீடாகச் சென்று குடிநீர், பால், பிஸ்கட், உணவு, ரொட்டி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை வழங்கி வரும் உங்களின் அளப்பரிய பங்களிப்பைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். பல மாவட்டங்களில் வெள்ள நீர் வடியவில்லை. மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்தச் சூழ்நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. எனவே நம் கழகத் தோழர்கள், தங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துகொண்ட பிறகே, பேரிடர்ப் பணிகள் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும். பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள நீர் முழுவதுமாக வடியும் வரை, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும். நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாம் அனைவரும் மக்களோடு மக்களாகக் கரம் கோத்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் உங்களைப் பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க ஆறு மாதங்களில் 50 ஆயிரம் கோடி கடன்; தமிழ்நாட்டின் பொருளாதாரம் எங்கே போகிறது? அன்புமணி கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com