1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

Anbumani Ramadoss: 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: June 1, 2026 at 12:29 pm

சென்னை, ஜுன் 1 2026: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி செய்த கடந்த ஐந்தாண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமித்து, அவற்றின் கட்டமைப்பையும், மனிதவளத்தையும் மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தலைமை ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

கல்வியாண்டு முடிவுக்கு வந்த மே 31-ஆம் நாளான நேற்று மட்டும் 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள், 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை உயர்நிலைப்பள்ளிகளில் 700 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்த்து 800 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை மன்னிக்கவே முடியாது. மாணவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலம் இந்தப் பள்ளிகளில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவது இந்தப் பள்ளிகள் தான். இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அவற்றின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதையும், மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதையும் தடுக்க முடியாது.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நேற்றோ, இன்றோ உருவானவை அல்ல. பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் ஒற்றை அரசாணை மூலம் இந்த பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப முடியும் ஆனால், நீதிமன்றங்களில் வழக்குகள் காலியாக இருப்பதைக் காரணம் காட்டியே தலைமை ஆசிரியர்களை நியமிப்பதை அரசு தவிர்த்து வந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதில் வேதனையான உண்மை என்னவென்றால், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை அரசாலோ அல்லது அரசின் தூண்டுதலால் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாலோ கடந்த காலங்களில் தொடரப்பட்டவை தான். தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இந்த அவலத்தை பாட்டாளி மக்கள் கட்சி பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனாலும் முந்தைய திமுக ஆட்சியில் இந்தக் குறையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை சொல்லித் தர வேண்டிய பள்ளிகளில், சுவர்களுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட தலைமை ஆசிரியர்கள் இல்லாதது எவ்வளவு கொடுமையான முரண்பாடு?

அந்த சுவர்கள் இல்லாமல் கல்வி எனும் சித்திரத்தை எவ்வாறு வரையமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்தும் பள்ளிக்கல்வித்துறையின் அவலத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களை நியமிக்கவும், அனைத்துக் கல்வி மாவட்டங்களுக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க திருநெல்வேலியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்.. 17 வயதான சிறுமி மீட்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com