திருநெல்வேலி, செப்.1, 2026: 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமே அந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால், அக்கட்சியின் வேட்பாளரே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என தெரிவித்தார்.
இதனிடையே, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜயை 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் தெரிவித்திருந்த நிலையில், அது காங்கிரஸின் அதிகாரப்பூர்வ முடிவு அல்ல; தனிப்பட்ட கருத்து என வைகோ கூறியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இருக்காது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் வெளியிடாமல் இருக்க முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பொதுவெளியில் முரண்பாடான அல்லது கவனக்குறைவான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
“இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தியைத் தவிர வேறு மாற்று பிரதமர் வேட்பாளருக்கு வாய்ப்பில்லை” என்ற நிலைப்பாட்டையும் வைகோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், 2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் முக்கிய விவாதமாகியுள்ளது.
இதையும் படிங்க: மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்