Mythology | ஸ்ரீ ராமபிரான் மீது அதிக அன்பும் பக்தியும் வைத்திருப்பது யார் தெரியுமா?
Mythology | ஸ்ரீ ராமபிரான் மீது அதிக அன்பும் பக்தியும் வைத்திருப்பது யார் தெரியுமா?
Published on: December 9, 2024 at 11:59 am
Mythology | ஸ்ரீ ராமபிரான் வனவாசம் முடிந்து அயோத்திக்கு வந்து அரசாட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது அனுமனும் ஸ்ரீ ராமபிரானோடே தங்கி இருந்தார். ஸ்ரீ ராமபிரான் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அனைத்து சேவைகளையும் அனுமனே அன்போடும் பக்தியோடும் செய்து வந்தார். அனுமனின் செயலை கவனித்து வந்த சீதா தேவியும் ஸ்ரீ ராமபிரானின் தம்பிகளும் நாமும் இதுபோன்று ஸ்ரீ ராமருக்கு ஒரு நாளாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டனர்.
இந்த விருப்பத்தை ராமபிரானிடம் சென்று நாளை ஒருநாள் மட்டும் உங்களுடைய அனைத்து சேவைகளையும் நாங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு ராமபிரானும் சம்மதித்தார். ராமர் காலையில் கண்விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை உள்ள அனைத்து வேலைகளையும் யார் யார் செய்வது என்று பட்டியலிட்டு தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.
அந்த பட்டியலை ராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெற சென்றனர். ராமர் அவர்களிடம் இதில் அனுமன் பெயர் குறிப்பிடவில்லையே என்று கேட்டார். அதற்கு நாங்களே அனைத்து சேவைகளையும் செய்கிறோம் என்று பதில் அளித்தனர். எல்லா சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா என்று ராமர் கேட்டார். அதற்கு ஆம் என்று கூறினர். இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டால் அதை அனுமன் செய்யலாமா என்று கேட்டார். அதற்கு அப்படி ஒரு நிலை வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றனர்.
நடந்தவைகளை ராமர் அனுமனிடம் சொல்லி நாளை ஒரு நாள் மட்டும் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் ஸ்ரீ ராமபிரான் எழுந்தவுடன் செய்ய வேண்டிய சேவைகள் அனைத்தையும் ஸ்ரீ ராமபிரானின் தம்பிகளும் சீதையும் செய்து வந்தனர். அன்று இரவு ஸ்ரீ ராமபிரான் உறங்க சென்றார். சீதா பிராட்டியும் தாம்பூலத்துடன் சென்றார். அப்போது ராமபிரான் வாயை திறந்தார் திறந்த வாயை அவர் மூடவே இல்லை.
சீதாதேவி பயத்துடன் லக்ஷ்மணன், பரதன் என அனைவரையும் கூப்பிட்டார். அனைவரும் வந்து அண்ணா, அண்ணா என்று அழைத்தும் ராமர் அசைவின்றி இருந்தார். அரண்மனை மருத்துவர் பரிசோதித்து விட்டு எந்த நோயும் இல்லை என்று கூறிச் சென்றார். பின்னர் வசிஷ்டர் குலகுரு வந்து அவரது பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். ராமர் அசையாமல் இருந்தார். சிறிது நேரம் தியானம் செய்த வசிஷ்டர் அனுமனால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும் என்று கூறினார்.
அனைவரும் அனுமனை அழைத்தனர். அனுமன் அங்கே துள்ளி குதித்து வந்தார். அங்கு வந்த அனுமன் ஸ்ரீ ராமபிரான் வாய் அருகில் சொடக்கு போட்டதும் வாய் தானாக மூடிக்கொண்டது. ராமர் பேச ஆரம்பித்தார். அப்போது ஸ்ரீ ராமர் எனக்கு கொட்டாவி வந்தால் அனுமன் தான் சொடக்கு போடுவார் இது உங்களுக்கு தெரியவில்லை என்று கூறினார். பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே தான் என்று அனைவரும் புரிந்துகொண்டு அனுமனை பாராட்டினர். இது ராமாயணத்தில் ராமர் மீது அனுமன் கொண்ட பக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட ராமர் செய்த திருவிளையாடல்.
இதையும் படிங்க : நெஞ்சை பிளந்த அனுமன்; வியந்து பார்த்த சபை: அன்று நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com