CJP Protest: டெல்லியில் 2-வது நாளாகத் தொடரும் சி.ஜே.பி போராட்டம்: 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CJP Protest: டெல்லியில் 2-வது நாளாகத் தொடரும் சி.ஜே.பி போராட்டம்: 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: October 12, 2026 at 12:07 pm
புதுடெல்லி, அக்.12, 2026: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி) சார்பில் நடைபெற்று வரும் போராட்டம் 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், போலீசார் அவர்களைப் பிடித்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். போராட்டத்தின் போது, “ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டும் சி.ஜே.பி, இதற்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், ஜந்தர் மந்தர் செல்லும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கன்னாட் பிளேஸ் மற்றும் ராஜீவ் சௌக் பகுதிகளில் பேரணியாகச் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, சனிக்கிழமையும் போராட்டத்துக்குச் செல்ல முயன்ற அரசியல் தலைவர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலர் பல்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
டெல்லியில் போராட்டம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் முக்கியப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டதுடன், ஜந்தர் மந்தர் செல்லும் பாதைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், போராட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் சிறு குழுக்களாகத் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : சி.ஜே.பி போராட்டம்.. கைது, தடுப்புக் காவல் – சட்டம் கூறுவது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com