SFI Members Protest : டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமாருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ இடதுசாரி உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
SFI Members Protest : டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமாருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃப்.ஐ இடதுசாரி உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Published on: October 10, 2026 at 1:33 pm
புதுடெல்லி, அக்.10, 2026: டெல்லியில் எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள், வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எஃப்.ஐ) உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை டெல்லி போலீசார் சனிக்கிழமை (அக்.10) கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வாக்காளர் சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படும் படிவம் 6 தொடர்பாகவும் புகார்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நடைமுறை விதிகளைக் காரணம் காட்டி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
எஸ்.எஃப்.ஐ. தேசியத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி கூறுகையில், சுமார் 400-க்கும் மேற்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்கத் திரண்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 10 மணியளவில் பேரணியைத் தொடங்கியவர்கள், சுமார் 11 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள ஏ.கே. கோபாலன் பவனிலிருந்து ஜந்தர் மந்தர் நோக்கி எஸ்.எஃப்.ஐ. மற்றும் ஜனநாயக வாலிபர் சங்க (டி.ஒய்.எஃப்.ஐ) நிர்வாகிகள் பேரணி செல்லத் திட்டமிட்டிருந்தனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும் என்றும், தங்களது எதிர்ப்பை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, உச்சநீதிமன்றம் அருகே பகவான் தாஸ் சாலையில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற வழக்கறிஞர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். கருப்பு கோட் அணிந்து வந்த அவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
போலீசார் அமைத்திருந்த தடுப்புகளைத் தாண்டி சுமார் 100 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல முடிந்ததாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். பெண் வழக்கறிஞர்களைப் பெண் போலீசார் தடுத்து நிறுத்தினர்; மற்ற போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டனர். இதனால் உச்சநீதிமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுமார் 25,000 போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 45 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் நகர எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, தங்களது தலைவர்களான அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி வந்த விமானத்திலிருந்தே போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக சி.ஜே.பி. குற்றம்சாட்டியது. தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 2022ல் சுட்டுக்கொலை.. இந்தியா வந்த ஷின்சோ அபே மனைவி.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com