புதுடெல்லி, ஜூலை 18 2026 : டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) அதிகாலை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே உடனடியாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குவதாக சமூக வலைதளமான X-ல் அறிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றும், ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெறவுள்ள பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் CJP அறிவித்துள்ளது.
CJP செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, சோனம் வாங்சுக்கை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியதாகவும், சில போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். அதேநேரத்தில், போலீசார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, வாங்சுக்கிற்கு அவசியமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கிடையில், சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ, குடும்பத்தினரின் மற்றும் அவர்களது மருத்துவர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும், AISA அமைப்பைச் சேர்ந்த நேஹா, அமீன், மனீஷ் ஆகியோர் ஜந்தர் மந்தரில் ஒற்றுமை உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருடன் இணைந்து நடைபெறவுள்ள பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 20 நாள் உண்ணாவிரதம் எதிரொலி… போராட்டத்தின் நடுவே மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சோனம் வாங்சுக்; டெல்லியில் பரபரப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்