Magalir Urimai Thogai Scheme: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
Magalir Urimai Thogai Scheme: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

Published on: May 15, 2026 at 11:05 am
சென்னை, மே 15 2026: தமிழகத்தில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை இன்று பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல் திமுக அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சியில் செயல்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இதையும் படிங்க : டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்.. புதிய பொறுப்பு என்ன? முழு விவரம்!
இந்நிலையில், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,000 உதவித்தொகை நேற்று மாணவ-மாணவியரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று மகளிர் உரிமைத்தொகையும் பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் விஜய் முன்னதாக தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், மே மாதத்திற்கான உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி தற்போது 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போதைக்கு ரூ.1,000 தொகை வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவி மிரட்டல்.. 3 மாணவர்கள் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com