சென்னை, ஜூலை 26, 2026: மத்திய அரசின் மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு அமைப்பான தெற்கு மண்டல கவுன்சிலுக்கு தமிழக அரசின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடன் இணைந்து இவர்கள் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
இதுதொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன், தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் உடன் இணைந்து கவுன்சிலின் இரண்டாவது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1956-ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், ஜூலை 17, 2026 தேதியிட்ட அரசாணை (G.O. Ms. No. 461) மூலம் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முந்தைய நியமனங்கள் மாற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசு அவ்வப்போது கூட்டும் தெற்கு மண்டல கவுன்சிலில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, உள்கட்டமைப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், நதிநீர் பகிர்வு, சமூக நலன் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். தமிழ்நாடு வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த கவுன்சிலுக்கான முதல் நியமனங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உண்டியல் திருட்டு விவகாரம்! 8 பேரை சஸ்பெண்ட் செய்த தமிழ்நாடு அரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்