Supreme Court: ரூ.634 கோடி லஞ்சப் புகார் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Supreme Court: ரூ.634 கோடி லஞ்சப் புகார் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Published on: November 2, 2026 at 3:13 pm
புதுடெல்லி, நவ. 2 2026: ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு இன்று (நவம்பர் 2) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவிலும், அக்டோபர் 26ஆம் தேதி மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவிலும் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், கே.என்.நேருவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
விசாரணையின்போது கே.என்.நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தன்னை முறையாக விசாரிக்காமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வாதிட்டார். மேலும், அமலாக்கத்துறையின் வழக்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்தத் தகவல்களின் அடிப்படையில் மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் முந்தைய கருத்துகள் அந்த மனுக்களைத் தீர்ப்பதற்கான நோக்கத்தில் மட்டுமே கூறப்பட்டவை என்றும், உரிய கட்டத்தில் தனது தரப்பு வாதங்களையும், தற்காப்பு விளக்கங்களையும் முன்வைக்க நேருவுக்கு உரிமை உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த வழக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான நியமனத்தில் சுமார் ரூ.634 கோடி சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார் தொடர்பானதாகும். ஒரு பணியிடத்திற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ளவும், வழக்குப் பதிவு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.
இதையும் படிங்க: முரசு புயல் எதிரொலி; சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com