Sivaganga: சிவகங்கை அருகே கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள. இவை, 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை எனக் கூறப்படுகிறது.
Sivaganga: சிவகங்கை அருகே கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள. இவை, 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை எனக் கூறப்படுகிறது.

Published on: August 20, 2026 at 1:57 pm
சிவகங்கை, ஆக.20, 2026: சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகிலுள்ள பிரவலூர் கிராமத்தில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் மற்றும் இரும்பு உலைக்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள ஓடையில் பழங்கால பொருட்கள் இருப்பதை முதலில் உள்ளூர் இளைஞர்கள் கவனித்து, அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் வேலாயுத ராஜாவிடம் தெரிவித்தனர். பின்னர் அவர் உட்பட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு பொருட்களை வெளிக்கொணர்ந்தனர்.
பிரவலூர் கிராமத்தின் வடக்கே, கடம்பன்குடி கண்மாய்க்கு தெற்கே பரந்து விரிந்த மேட்டுப்பகுதியிலும், அதன் அருகிலுள்ள வறண்ட ஓடையிலும் கல்வட்டங்கள், ஈமத்தாழிகள், உடைந்த கருப்பு–சிவப்பு நிறப் பானை ஓடுகள், இரும்புக் கசடுகள் மற்றும் குவார்ட்ஸ் வகைக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மண் அரிப்பு காரணமாக ஈமத்தாழிகள் வெளிப்படையாகக் காணப்படுகின்றன.
முனைவர் வேலாயுத ராஜா கூறுகையில், இவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்களாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. அந்தக் காலத்தில் இறந்தவர்களின் எலும்புகள் மற்றும் கல்லறைப் பொருட்கள் பெரிய மண் பானைகளில் வைக்கப்பட்டு மூடியால் மூடப்பட்டு, அதன் மேல் கல் அல்லது கல் குவியல் வைப்பது வழக்கமாக இருந்தது. இவை கல்வட்டம் என அழைக்கப்படுகின்றன.
பெருங்கற்காலத்தில் பல்வேறு வகையான அடக்க முறைகள் இருந்தன. கல் திட்டை (Dolmen), குழிஅடக்கம், பானை அடக்கம், சர்கோபகஸ், பாறை வெட்டுக் கல்லறை, குடைக்கல், தொப்பிக்கல், மென்ஹிர் (குத்துக்கல்), ஆந்த்ரோமார்பிக் (மனித உருவக் கற்சிலை), கல்வட்டம் மற்றும் கற்குவை போன்ற பல்வேறு ஈமச்சின்னங்கள் பயன்படுத்தப்பட்டன.
இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கள் மற்றும் பானை ஓடுகள், பெருங்கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் இறப்பு சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக இரும்புக் கசடுகள், அந்தக் காலத்தில் உலோகப் பயன்பாடு இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன.
இந்தக் கண்டுபிடிப்புகள், தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றை மேலும் விளக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம், அவர்களின் சமூக அமைப்பு மற்றும் கலாச்சாரம் குறித்த புதிய தகவல்களை வெளிக்கொணரும் வாய்ப்பு உள்ளது.
சிவகங்கை மாவட்ட தொல்லியல் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், இப்பகுதியில் இருந்து மேலும் பல முக்கியமான தொல்பொருட்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு.. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும்.. முதலமைச்சர் விஜய்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com