டாம்பெரே, நவ. 2 2026: பின்லாந்தில் நடைபெற்ற 46-வது சர்வதேச டாம்மர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 14 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதன்மூலம் ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி நிறைவடைந்த இந்தப் போட்டி பின்லாந்தின் டாம்பெரே நகரில் நடைபெற்றது.
மகளிர் 54 கிலோ எடைப்பிரிவில் ஆர்த்தி தாரியல், 65 கிலோ எடைப்பிரிவில் அங்குஷிதா போரா, 70 கிலோ எடைப்பிரிவில் அருந்ததி சௌத்ரி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் பவன் பர்த்வாலும் தங்கம் வென்று இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கையை நான்காக உயர்த்தினார்.
வெள்ளிப் பதக்கங்களைப் பொறுத்தவரை, ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் முகமது ஹுசாமுதீனும், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மினும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர். மேலும், ஆடவர் பிரிவில் விவேக் மீனா (65 கிலோ), ஹிதேஷ் (70 கிலோ), அக்ஷய் (80 கிலோ), போபின் சௌஹான் (90 கிலோ), சேத்தன் சௌத்ரி (90 கிலோவுக்கு மேல்) ஆகியோரும், மகளிர் பிரிவில் தனு (51 கிலோ), திஷா பாட்டீல் (60 கிலோ), இம்ரோஸ் கான் (75 கிலோ) ஆகியோரும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
1977ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் டாம்மர் குத்துச்சண்டை போட்டி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மலேசியாவை வீழ்த்தி இந்தியா 4வது வெற்றி! ஆசிய ஹாக்கி தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்