Vitamin B12 Deficiency in Youth: இந்திய இளைஞர்களில் 3-ல் 2 பேருக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது, ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Vitamin B12 Deficiency in Youth: இந்திய இளைஞர்களில் 3-ல் 2 பேருக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது, ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published on: November 29, 2026 at 2:21 pm
புதுடெல்லி, நவ. 29, 2026: இந்தியாவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது ஐசிஎம்ஆர் – தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் சிறுவர்களில் 66.1 சதவீதம் பேருக்கும், சிறுமிகளில் 65.4 சதவீதம் பேருக்கும் வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2023 முதல் 2025 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 183 மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்டது. 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதில் இடம்பெற்றன. மேலும், 1.7 லட்சத்துக்கும் அதிகமான ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ரத்தத்தில் வைட்டமின் பி12 அளவு 203 பிகோகிராம்/மில்லிலிட்டருக்குக் கீழ் இருந்தால் குறைபாடாகக் கணக்கிடப்பட்டது.
இந்தக் குறைபாடு இளம் பருவத்தினரிடம் மட்டுமின்றி, பிற வயதினரிடமும் காணப்படுகிறது. 20 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண்களில் 60.4 சதவீதம் பேருக்கும், கர்ப்பிணிப் பெண்களில் 63.1 சதவீதம் பேருக்கும், பாலூட்டும் தாய்மார்களில் 51.8 சதவீதம் பேருக்கும் வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 12 முதல் 59 மாதக் குழந்தைகளில் 37.3 சதவீதம் பேருக்கும், 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 46.5 சதவீதம் பேருக்கும் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, இளம் பருவத்தினரிடம் வைட்டமின் பி12 குறைபாடு, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் குறைபாட்டைவிட அதிகமாக இருப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுமிகளில் 36.3 சதவீதம் பேருக்கு இரும்புச்சத்து குறைபாடும், 8.6 சதவீதம் பேருக்கு ஃபோலேட் குறைபாடும் உள்ளது. சிறுவர்களில் இந்த விகிதங்கள் முறையே 10 சதவீதம் மற்றும் 6.3 சதவீதமாக உள்ளன. நாட்டின் பல்வேறு வயதுப் பிரிவினரிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆய்வு உதவும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : காற்று மாசுபாடு மூளை செல்களின் செயல்பாட்டை மாற்றி டிமென்ஷியா பாதிப்பை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com