வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்; உடனடி நடவடிக்கை தேவை: மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | “வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: November 7, 2024 at 11:34 am

Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர். கடலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளர்.

தொடர்ந்து, “கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் சில நாட்களுக்கு முன்பு தமது சகோதரியின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு, பு.உடையூர் என்ற கிராமத்தின் வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். வழியை விட்டு ஒதுங்கி நின்று மது அருந்தும்படி செல்லத்துரை கூறியதால் ஆத்திரம் அடைந்த 15&க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்த கும்பல், கட்டைகளாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் தலை, முகம், உடல் என அனைத்து இடங்களிலும் காயமடைந்து, ரத்தம் வழியும் நிலையில் செல்லத்துரை மயங்கி விழுந்துள்ளார்.

அப்போதும் கொலைவெறி அடங்காத கும்பல், அவரை கால்களால் எட்டி உதைத்தும், அவரது சட்டையில் உள்ள வன்னியர் சாதி சின்னத்தை மிதித்தும், அவதூறாக பேசியும் இழிவுபடுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த மனிதநேயமும், பண்பாடும் இல்லாத இந்த நிகழ்வுகளை தங்களின் சாதனைகளாக காட்டிக்கொள்ளும் நோக்குடன் காணொலியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அரக்கமனம் படைத்தவர்களால் மட்டுமே இவ்வளவு கொடூரமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்துகொள்ளமுடியும்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. செல்லத்துரை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டிய காவல்துறை, அவர்கள் மீது மிகவும் சாதாரணமான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பாதுகாக்க முயல்கிறது. செல்லத்துரை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது சொந்த ஊருக்கு சென்ற வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியும், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷும் செல்லத்துரையின் குடும்பம் மற்றும் ஊர்மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இது மனிதநேயத்தின் அடிப்படையில் அனைவரும் செய்யக் கூடிய ஒன்று தான். இது பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளின் முதன்மைக் கடமையும் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புவனகிரியில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி வன்னிய மக்களையும் இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளனர். வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களின் தலையை வெட்டி எடுப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, ‘‘தமிழ்நாட்டில் இப்போது நடப்பது திருமா காலம். இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக் கொண்டு தான் இருப்போம். அவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும்’’ என்று கொக்கரித்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் ஏதேனும் பகுதியில் ஆளும்கட்சிக்கு எதிராக எவரேனும் மேடை போட்டு பேசினால், அந்த கூட்டத்தின் ஒலி வாங்கியை அணைப்பது, மின்சாரத்தை துண்டிப்பது, கூட்ட ஏற்பாட்டாளர்களை கைது செய்வது உள்ளிட்ட அனைத்து சாகசங்களையும் செய்யும் காவல்துறை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொக்கரிப்புகள், வெறுப்புப் பேச்சுகள், கொலைமிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, கொலை மிரட்டல் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவரது அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு நடத்தியுள்ளார். கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளை, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தால், அலுவலகத்திற்கு அழைத்து உபசரிப்பது தான் திராவிட மாடல் காவல்துறையின் கொள்கையா?

தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வன்னியர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் பட்டியலினத்தவர்கள். தமிழ்நாட்டு மக்கள்தொகையில் இவர்கள் தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டின் சட்டம் & ஒழுங்கை மட்டுமின்றி, வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதால் தான் வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவர்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன். ஆனால், இரு சமூகங்கள் ஒன்று பட்டால் தங்களின் அரசியல் வணிகம் நடக்காது என்று அஞ்சும் சில கும்பல்கள் தான் தொடர்ந்து இத்தகைய வன்முறைகள், வெறுப்புப் பேச்சுகள் ஆகியவற்றை தூண்டி வருகின்றன.

இத்தகைய சட்டவிரோத செயல்களை முலையிலேயே கிள்ளி எறிய வேண்டிய தமிழக அரசு, அதன் கையாலாகாதத் தனத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 952 நாட்கள் ஆகியும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் வன்னியர்களை வஞ்சிக்கும் திராவிட மாடல் அரசு, வன்னியர்கள் மீதான தாக்குதல்களையும் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வன்னியர்களும், பட்டியலினத்தவரும் அடித்துக் கொண்டால் தான் தங்களின் பிழைப்பு நடக்கும் என்று என்பதால் காவல்துறையின் கைகளை ஆளுங்கட்சி கட்டி வைத்திருக்கிறது. காவல்துறையும் சட்டத்தின்படி செயல்படாமல் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக உள்ளது.

மஞ்சக்கொல்லை செல்லத்துரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடூரமாக தாக்கி, ரத்தம் கொட்டும் நிலையில் அவர் சுய நினைவின்றி விழுந்து கிடப்பது, அவர் மீதும், அவரது உடை மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கால்களை வைத்து வன்னியர் சமூகத்தை அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்றும், அடுத்த 42 ஆண்டுகளுக்கு வன்னியர்கள் எங்களிடம் அடிவாங்கித் தான் ஆக வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பேசுவது உள்ளிட்ட அனைத்துக்கும் காணொலி ஆதாரங்கள் உள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு கடலூர் மாவட்ட காவல்துறை தயங்குவது ஏன்? யாருடைய ஆணைக்காக காவல்துறை காத்திருக்கிறது?

வன்னியர்களும், பட்டியலினத்தவரும் நட்புடன் வாழ வேண்டும், பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். இந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலான எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். இது எங்களின் நல்ல நோக்கமே தவிர பலவீனம் அல்ல. அதே நேரத்தில் கொட்டக் கொட்ட குனிந்து கொண்டிருக்கவும் மாட்டோம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர வேண்டும்.

மஞ்சக்கொல்லை செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு ; அன்புமணி கண்டனம்

தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை
Sri Lankan government plans to destroy Tamil Nadu fishermens boats says Dr Ramadoss

தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்? மருத்துவர்

கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? மருத்துவர் ராமதாஸ் கேள்வி
PMK founder Ramadoss

கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com