சென்னை, நவ.26, 2026: ஹாலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’. மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதி டிரெய்லர் கடந்த நவம்பர் 23-ம் தேதி வெளியானது. வெளியான முதல் 24 மணி நேரத்திலேயே 563 மில்லியன் (56.3 கோடி) பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் டிஸ்னி நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிக பார்வைகளைப் பெற்ற டிரெய்லர் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. மேலும், உலக அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற திரைப்பட டிரெய்லர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 50.3 கோடி பார்வைகளைப் பெற்றிருந்தது. தற்போது இறுதி டிரெய்லர் அந்தச் சாதனையையும் முறியடித்துள்ளது.
உலக அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரெய்லர்கள் பட்டியலில் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் 71.86 கோடி பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ பிடித்துள்ளது. மேலும், ‘டெட்பூல் அண்ட் வால்வரின்’ படத்தின் டீசர் பெற்ற 36.5 கோடி பார்வைகளையும் இப்படத்தின் டிரெய்லர் கடந்துள்ளது.
இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியாவில் இப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி வெளியாக உள்ளது. டிரெய்லருக்குக் கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டிய அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்