வேதியியல் நோபல் பரிசு.. பிரான்ஸ், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு!

Nobel Prize in Chemistry: 2026ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர்கள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 8, 2026 at 12:05 pm

ஸ்வீடன், அக்.8, 2026: 2026ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஹென்றி பி. காகன் (Henri B. Kagan) மற்றும் ஜப்பானைச் சேர்ந்த கென்சோ சோவாய் (Kenso Soai) ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரிம வேதியியலில் சமச்சீரற்ற தொகுப்பு முறையில் நேர்கோட்டற்ற விளைவுகள் மற்றும் தன்வினையூக்கம் தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட முன்னோடி கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
உயிரினங்களில் காணப்படும் மூலக்கூறுகள் ஏன் ஒரே கண்ணாடிப் பிம்ப வடிவத்தை அதிகமாகக் கொண்டுள்ளன என்ற நூற்றாண்டு கால வேதியியல் புதிருக்கு இவர்களின் ஆய்வுகள் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளன.

சில வேதிப்பொருள் மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று கண்ணாடியில் தெரியும் பிம்பங்களைப் போன்ற இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றன. இவை சிராலிட்டி எனப்படும் தன்மையைக் கொண்டவை. மனிதர்களின் இடது, வலது கைகளைப் போல இந்த இரு வடிவங்களும் தோற்றத்தில் ஒத்திருந்தாலும் ஒன்றை மற்றொன்றின் மீது முழுமையாகப் பொருத்த முடியாது. குறிப்பாக அமினோ அமிலங்கள் போன்ற உயிரியல் மூலக்கூறுகளில் இரண்டு வடிவங்கள் சாத்தியமாக இருந்தாலும், உயிரினங்களின் புரதங்களில் அவற்றில் ஒரு வடிவமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒரே வடிவத்தை நோக்கி உயிரின் வேதியியல் செயல்பாடுகள் அமைந்திருப்பது ஹோமோசிராலிட்டி எனப்படுகிறது.

இந்த நிகழ்வு எப்படி தானாக உருவானது என்ற கேள்விக்கு காகன் மற்றும் சோவாயின் ஆய்வுகள் முக்கியப் பதிலை வழங்கியுள்ளன. இந்த ஆய்வில் காகனின் பங்களிப்பு முதலில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. 1986ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட ஆய்வுகள், வேதிவினையில் பயன்படுத்தப்படும் வினையூக்கியின் கண்ணாடிப் பிம்ப வடிவங்களின் விகிதத்துக்கும் உருவாகும் பொருளின் வடிவங்களுக்கும் இடையே நேரடியான, நேர்கோட்டுத் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படுத்தின. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கண்ணாடிப் பிம்ப வடிவத்தை அதிகமாக உருவாக்கும் வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கென்சோ சோவாய் தன்வினையூக்க வேதிவினை குறித்த ஆய்வுகளை முன்னெடுத்தார். 1995ஆம் ஆண்டில் அதற்கான முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்த அவர், 2003ஆம் ஆண்டில் ஒரு சிறிய ஆரம்ப வேறுபாட்டையே பயன்படுத்தி அதே கண்ணாடிப் பிம்ப வடிவம் தன்னைத் தானே பெருக்கிக்கொள்ளும் வகையிலான வேதிவினையை வெற்றிகரமாக நிரூபித்தார்.

இந்தக் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் அடிப்படை வேதியியலைத் தாண்டி மருந்து தயாரிப்பு மற்றும் உயிரியல் சார்ந்த தொழில்துறைகளிலும் பெரிதும் உள்ளது. ஒரே மூலக்கூறின் இரு கண்ணாடிப் பிம்ப வடிவங்களும் மனித உடலில் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது; ஒன்றுக்கு சிகிச்சைத் தன்மை இருக்கலாம், மற்றொன்று தேவையற்ற அல்லது தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, விரும்பிய வடிவிலான மூலக்கூறுகளைத் துல்லியமாக உருவாக்கும் திறன் மருந்து தயாரிப்பில் மிகவும் முக்கியமானதாகும். 95 வயதான ஹென்றி காகன் மற்றும் 76 வயதான கென்சோ சோவாய் இருவரும் நோபல் பரிசுத் தொகையான 1.2 கோடி ஸ்வீடிஷ் குரோனர் தொகையை சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் பரபரப்பு.. பிரமாண்ட பேரணியை தொடங்கிய இம்ரான் கான் ஆதரவாளர்கள்!

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி? பரபரப்பு தகவல்கள்
Flydubai Flight

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com