Special Buses: மகாளய அமாவாசை, வார இறுதி மற்றும் திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Special Buses: மகாளய அமாவாசை, வார இறுதி மற்றும் திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Published on: October 8, 2026 at 10:56 am
சென்னை, அக்.8, 2026: மகாளய அமாவாசை மற்றும் வார இறுதியையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பயணிகளின் தேவையை சமாளிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு சேவைகள் அக்டோபர் 21-ம் தேதி வரை தேவைக்கேற்ப இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னையின் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை 1,075 பேருந்துகளும், அக்டோபர் 10-ம் தேதி சனிக்கிழமை 845 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு சி.எம்.பி.டி பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு அக்டோபர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் தலா 145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வார இறுதியைத் தொடர்ந்து அக்டோபர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 875 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு முக்கிய பேருந்து நிலையங்களில் கூடுதல் அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுச்சேரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட குறிப்பிட்ட வழித்தடங்களில் முன்பதிவு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் டி.என்.எஸ்.டி.சி (TNSTC) செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க : அசாமில் இருந்து வாங்கப்பட்ட 5 யானைகள்.. எந்தெந்த கோவிலுக்கு செல்கிறது தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com