Senthil Balaji: குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!
Senthil Balaji: குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!

Published on: July 24, 2026 at 12:47 pm
சென்னை, ஜூலை 24, 2026 : தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயன்றதாகத் தொடரப்பட்ட குதிரை பேர வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்களுடன் இன்று நேரில் ஆஜரானார்.
முன்னதாக, இவ்வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார்ஆகியோருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அதன்படி, தலா ₹25,000 சொந்தப் பிணைத்தொகை மற்றும் இருநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இதற்கிடையே, வழக்கு விசாரணை என்ற பெயரில் காவல்துறை தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் அளிக்கப்பட்டும் இதுவரை இருவரும் நீதிமன்றத்தில் சரணடையாத நிலையில், துன்புறுத்தக் கூடாது என எவ்வாறு கோர முடியும் என்று கேள்வி எழுப்பி, இருவரின் மனுக்களையும் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை முன்ஜாமீனை முறைப்படி அமல்படுத்தவும், நீதிமன்றத்தில் பிணைத் தொகையைச் செலுத்தி சரணடைதல் நடைமுறைகளை நிறைவு செய்யவும் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு நேரில் வருகை தந்தார். அவருடன் வந்த வழக்கறிஞர்கள் குழு, பிணைப் பத்திரங்களைச் சமர்ப்பித்து வழக்கு தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடைமுறைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : தூத்துக்குடி காவல் நிலைய சித்திரவதை? 24 வயது இளைஞர் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com