Annamalai New Party: பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
Annamalai New Party: பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

Published on: June 5, 2026 at 3:35 pm
Updated on: June 5, 2026 at 3:38 pm
சென்னை, ஜுன் 5 2026 : தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக உள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலையின் விலகலை பா.ஜ.க தலைமை இன்று உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து புதிய அரசியல் அமைப்பு குறித்த அறிவிப்பை இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் புதிய அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அண்ணாமலை, “புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது. என்னுடைய கருத்துகளுக்கு பாஜக தலைமை போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டின் அரசியல் அடிப்படை கட்டமைப்பையே மாற்றக்கூடிய புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்தேன்” என்றார்.
இயக்கத்தின் நோக்கம்
“தமிழ்நாட்டில் அன்போடு, ஆனந்தமாக புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். அடுத்த தேர்தலில் நமது கட்சி போட்டியிடும். கடந்த 18 மாதங்களாக பாஜக உடன் கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதியே விலகுவதை தெரிவித்துவிட்டேன். தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பேசுவதில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை. பாஜக தமிழ்நாட்டின் அடையாளத்தோடு இருக்க வேண்டும் என விரும்பினேன்” என கூறினார்.
அவர் மேலும், 2020-ஆம் ஆண்டு பாஜகவில் இணைய ஒரு நாள் முன்பு, நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் மூன்று முக்கிய காரணங்களால் அந்த அழைப்பை நிராகரித்து பாஜகவில் இணைந்ததாகவும் அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும். Cult Politics-இல் இருந்து வெளியே வர வேண்டும். நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ கிடையாது. ‘மாறுவோம்… மாற்றுவோம்’ என்பதே நமது கொள்கை” என வலியுறுத்தினார்.
An Important Announcement https://t.co/IcEnfaZGRK
— K.Annamalai (@annamalai_k) June 5, 2026
அப்துல்கலாம் சென்டர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை
அண்ணாமலை, “அப்துல்கலாம் சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ் என்ற பெயரில் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும். முதலில் இயக்கமாக தொடங்கி, பிறகு கட்சியாக மாறுவோம். சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டுவருவதே என் இலக்கு” என தெரிவித்தார்.
தற்போது இயக்கமாக தொடங்கப்படும் இந்த அமைப்பு, சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார். “பாஜகவின் கொள்கைகளை ஏற்க முடியாத இடங்களில் நேரடியாக எதிர்ப்பேன். அதிமுக, திமுகவை எப்படி பார்க்கிறேனோ அதேபோல பாஜகவையும் பார்ப்பேன். முதலில் இயக்கமாக மக்களை ஒருங்கிணைத்து, பின்னர் அரசியல் பயிற்சி அளித்து கட்சியாக மாற்றுவேன்” என்றார்.
தமிழ்நாட்டின் அரசியல் மொழி மற்றும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதே தனது இலக்கு என்றும், சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களை அரசியலுக்குள் கொண்டு வர சிறிது கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்த அண்ணாமலை, “சமரசமற்ற கொள்கைகளுடன் செயல்படும் இயக்கமாக இதை வழிநடத்துவேன்” என்று கூறினார்.
இந்நிலையில், தனது புதிய இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கையையும் அண்ணாமலை தொடங்கியுள்ளார். “இது நம்ம இயக்கம்” என்ற பெயரில் பொதுமக்கள் இணையக்கூடிய வகையில் இணையதள முகவரியையும் (https://wetheleader.org/) அவர் வெளியிட்டுள்ளார்.
புதிய இயக்கம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க டாஸ்மாக்கில் வருகிறது முக்கிய மாற்றங்கள்.. விஜய் டார்கெட் இதுதான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com