சென்னை, மே 25, 2026: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று (திங்கள்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் – மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியாளர்..
மேலும், “உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களுக்கு துரோகம்
தொடர்ந்து, “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்” எனவும் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா.. தமிழக அரசியலில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்