புவனேஸ்வர், ஆக. 7 2026: நடுத்தர தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இந்த சோதனை நடைபெற்றது. ஏவுகணையின் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுகோள்களும் இந்த சோதனையின் மூலம் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, ஸ்ட்ராட்டஜிக் போர்க்ஸ் கமன்ட் (SFC)-ன் மேற்பார்வையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது அக்னி-4 ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்கள் திட்டமிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி-4 ஏவுகணை
அக்னி-4 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை, நாட்டின் மூலோபாய தடுப்பாற்றல் திறனை மேலும் வலுப்படுத்துவதில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் நாட்டின் பாதுகாப்புத் திறன்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதியையும் இந்த சோதனை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் பாராட்டு
அக்னி-4 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, மூலோபாயப் படைகள் கட்டளையகம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பிற்கு (DRDO) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேசத்தின் எல்லைகளையும் மக்களையும் பாதுகாப்பதில் இந்தியா எப்போதும் உறுதியுடன் செயல்படும் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அக்னி-4 ஏவுகணையானது, பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. நாட்டின் அணுஆயுதத் தடுப்பு அமைப்பின் முக்கிய அங்கமாகத் திகழும் இந்த ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது, இந்தியாவின் வான்வழி மற்றும் மூலோபாயப் பாதுகாப்பு கட்டமைப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : திருநெல்வேலி, தூத்துக்குடியில் விண்வெளித் துறை முதலீட்டு மண்டலம்.. தமிழ்நாடு அரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்