திருநெல்வேலி, ஜுன் 2 2026: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பாணான் குளத்தைச் சேர்ந்த லட்சுமணன் (48) என்பவரின் மகளுக்கு கடந்த மார்ச் 17-ஆம் தேதி, கல்வி உதவித்தொகை வந்திருப்பதாக கூறி, வாட்ஸ் அப் மூலம் QR கோடு அனுப்பி சுமார் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த ராஜு (25), ரிஷி (27), ராகுல் (35) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சத்யா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூவருக்கும் தலா 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தந்த சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், திறம்பட விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி, உதவி செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் அரசு வழக்கறிஞர் அருண் பாண்டியன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரசன்ன குமார், ஐ.பி.எஸ்., பாராட்டினார்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்.. 17 வயதான சிறுமி மீட்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்