Dr Anbumani: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு; ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr Anbumani: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு; ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: June 24, 2025 at 10:30 am
Updated on: June 24, 2025 at 1:25 pm
சென்னை, ஜூன் 24 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினர், தங்களுக்கு பணி நிலைப்பும், ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. பொருளாதாரப் படிநிலையில் கடைசி இடத்தில் இருக்கும் அவர்களின் உரிமையை அரசே பறிப்பது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மாதத்திற்கு 5 நாள்கள் வேலை போதுமானதல்ல என்றும், பணி நாள்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் ஊர்க்காவல்படையினர் கோரிக்கை விடுத்த நிலையில், பணி நாள்களின் எண்ணிக்கையை 10 ஆக 2019&ஆம் ஆண்டில் உயர்த்திய தமிழக அரசு, பணி நேரத்தின் அளவை 4 மணி நேரமாகவும், ஊதியத்தை ரூ.280 ஆகவும் குறைத்து விட்டது.
அதனால், மாதத்திற்கு 10 நாள்கள் பணி செய்தாலும், அதே ரூ.2,800 மட்டும் தான் ஊதியமாக கிடைத்தது. இதுதவிர அதிகாரப்பூர்மற்ற வகையில் பல நாள்கள் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டாலும் கூட அதற்காக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. இப்படியாக உச்சநீதிமன்றமே ஆணையிட்டாலும் மாத ஊதியத்தை ரூ.2800க்கும் மேல் உயர்த்த தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இதற்காக பல ஏமாற்று வேலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படை
தொடர்ந்து, “தமிழ்நாட்டில் ஊர்காவல் படையில், 15,622 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவருமே, கடந்த 15 ஆண்டுகளாக ஊர்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் இதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,800 என்பது எந்த வகையிலும் போதுமானதல்ல. அவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் அதை செயல்படுத்த மாட்டோம் என மாநில அரசு பிடிவாதம் பிடிப்பது சரியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
ஏமாற்றிய தி.மு.க
மேலும், “2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘‘காவல்துறையினருக்கு பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்குடன் அவர்களின் பணி நாள்கள் உயர்த்தப்படும்; ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், மற்ற வாக்குறுதிகளைப் போலவே இந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது.
இது மிக மோசமான துரோகம். நாட்டைக் காக்க பாடுபடும் ஊர்க்காவல் படையினருக்கு இனியும் துரோகம் செய்யக்கூடாது. உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு ஊர்க்காவல் படையினரின் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதுடன், அவர்களுக்கு பணி நிலைப்பும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க மாம்பழ விவசாயிகளுக்கு தமிழக அரசு பச்சைத் துரோகம்; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com