தீயசக்தி தி.மு.க.வுடன் கைகோர்க்க முயற்சி.. நான் போகிறேன்.. எம்.ஆர் விஜய பாஸ்கர்

MR Vijayabaskar : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தீயசக்தி என அடையாளம் காணப்பட்ட தி.மு.க.வுடன், அ.தி.மு.க. கூட்டு சேர நினைத்தது என சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Published on: June 30, 2026 at 7:19 pm

சென்னை, ஜூன் 30, 2026: அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம் பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ அ.தி.மு.க.வில் இணைந்தவர் அல்ல என்றும், இந்த இயக்கத்தை மூச்சாகக் கருதி வாழ்ந்தவர் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சி சந்தித்த சோதனையான காலகட்டங்களில், எடப்பாடி பழனிசாமிக்கு உறுதியாக பின்னால் நின்றதாகவும், கரூரில் அ.தி.மு.க. கொடியை ஏற்ற பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி வந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தன் மீது 43 பொய் வழக்குகளும், குடும்பத்தினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பாய்ந்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இத்தனை தியாகங்களுக்கும் பரிசாக துரோகமே கிடைத்ததாக அவர் சாடியுள்ளார். மேலும், ஜெயலலிதா ‘தீய சக்தி’ என்று அடையாளம் காட்டிய தி.மு.கவுடன் தற்போதைய அ.தி.மு.க. தலைமை கைகோர்க்க முற்படுவதை கண்டு ரத்தக்கண்ணீர் வடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக முன்னிறுத்த தொண்டர்கள் உயிரை கொடுத்த நிலையில், தற்போது தொண்டர்களின் தார்மீக உணர்வுகளை மதிக்காமல் தலைமை எடுத்துள்ள ‘சமரச முடிவு’ இயக்கத்தை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தலைமையின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக தானும், தன்னுடன் பயணித்த கழகத் தோழர்களும் தயாராக இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இயக்கத்திற்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியையும் உழைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர், இன்று மிகுந்த மன வேதனையுடனும் கண்ணீருடனும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆயினும், கரூர் தொகுதி மக்களின் சேவகனாக தனது மக்கள் பயணம் என்றும் தொடரும் என்று உறுதியளித்துள்ளார். இந்த அதிரடி விலகல் முடிவு, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஆளுநரை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com