Anbumani Ramadoss | “நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த திறனற்ற திமுக அரசு, நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிப்பதா?” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
Anbumani Ramadoss | “நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த திறனற்ற திமுக அரசு, நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிப்பதா?” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
Published on: November 4, 2024 at 7:13 pm
Anbumani Ramadoss | பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “திறனற்ற திமுக அரசு, நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிப்பதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வளர்ச்சி, கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்யும் தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டம் கடந்த அக்டோபர் 18&ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத் தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சியும், பல்வேறு உழவர் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்த பிறகும், தனியார் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மொத்தம் 41,127 ஏரிகள் இருந்தன. அவற்றின் மொத்தக் கொள்ளளவு 347 டி.எம்.சி. இது தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி அணை, சாத்தனூர் அணை, அமராவதி அணை, தென்பெண்ணையாறு அணை உள்ளிட்ட அனைத்து அணைகளின் கொள்ளளவை விடவும் அதிகம் ஆகும்.
ஆனால், அவற்றில் சுமார் 15 ஆயிரம் ஏரிகள் இப்போது என்ன ஆயின என்பதே தெரியவில்லை. இப்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாசனப்பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், ஒரே ஒரு பாசனத் திட்டத்தைக் கூட செயல்படுத்தவில்லை.
புதிய பாசனத் திட்டத்தை செயல்படுத்த திறனற்ற திமுக அரசு, குறைந்தபட்சம் இருக்கும் நீர்நிலைகளையாவது பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஏற்கனவே இருக்கும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக சிப்காட் அமைப்பின் சார்பில் 45,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நில வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கும் போது 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நில ஒருங்கிணைப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய தேவை என்ன? அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை தங்களுக்கு வேண்டிய சில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தச் சட்டம் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது உழவர்களுக்கும், பொதுமக்களும் இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.
ஒருபுறம் நீர்நிலைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் நீர்நிலைகளின் அருகில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.
காலம், காலமாக ஓர் இடத்தில் குடியிருக்கும் மக்களை, அவர்கள் இருக்கும் இடம் நீர்நிலைப் புறம்போக்கு என்று கூறி திராவிடமாடல் அரசு துரத்தி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னொருபுறம் நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரை வார்க்கிறது என்றால், திமுக அரசு யாருக்காக செயல்படுகிறது? என்பதை உணரலாம்.
நீர்நிலைகளில் எந்தவித கட்டுமானங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் ஆணையிட்டிருந்தது.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அடுத்த சில நாட்களிலேயே நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் சட்டத்தை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது என்றால், தனியார் நிறுவனங்களுக்கு அந்த அரசு எந்த அளவுக்கு கடமைப்பட்டுள்ளது? என்பதை மதிப்பிட முடியும். நீர்நிலைகளை அழித்து விட்டு, சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டின் இன்றையத் தேவை பாசனப் பரப்பை அதிகரிப்பது தான். அதற்கான புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டுமே தவிர, இருக்கும் நீர்நிலைகளையும் தாரை வார்க்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதை திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க சாதிவாரி கணக்கெடுப்பு; 100% இடப்பங்கீடு: மருத்துவர் ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com