“7.8% பொருளாதார வளர்ச்சி 140 கோடி மக்களின் உழைப்பின் பிரதிபலிப்பு” – பிரதமர் மோடி
Modi on Growth: இந்தியாவின் 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி 140 கோடி மக்களின் கடின உழைப்பு மற்றும் கூட்டு உறுதியின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்த தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது அவசியம் என்றும், சுதேசி பொருட்களை பயன்படுத்தி ‘உள்ளூருக்கான குரல்’ இயக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி, செப்.1, 2026: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில், இது 140 கோடி மக்களின் கடின உழைப்பு மற்றும் கூட்டு உறுதியின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்த அவர், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நீடித்து வரும் போர்கள் மற்றும் உலகளாவிய நிலையற்ற தன்மை போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) உருவாக்குவது முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வலிமையை மேலும் அதிகரிக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மக்கள் சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும், ‘Vocal for Local’ என்ற உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும், ‘Made in India’ தயாரிப்புகளை வாங்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்துவதுடன், வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், அவசியமில்லாத நிலையில் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களும் சுதேசி நடைமுறையை பின்பற்றினால், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது ‘விக்சித் பாரத்’ என்ற வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய முடியும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.