How to make vegetable momos | ரோட்டு கடையில் சாப்பிடக்கூடிய சுவையான மோமோஸ் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
How to make vegetable momos | ரோட்டு கடையில் சாப்பிடக்கூடிய சுவையான மோமோஸ் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: January 26, 2025 at 11:41 am
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ருசியான மோமோஸ் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
மைதா மாவு-1½ கப்
உப்பு-1 டீஸ்பூன்
எண்ணெய்-1 டீஸ்பூன்
ஸ்டப்பிங் தயாரிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-2
வெங்காயம் -1
மிளகு தூள் -1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
முட்டைகோஸ் -1கப்
துருவிய கேரட்-1கப்
சோயா சாஸ் -1 டீ ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை-½ கப்
மோமோஸ் சட்னி தயாரிக்க
தக்காளி -5
காஷ்மீரி மிளகாய் -10
எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி -3 டீஸ்பூன்
பூண்டு -¼கப்
உப்பு -1 டீஸ்பூன்
சர்க்கரை-1 டீஸ்பூன்
சோயா சாஸ் -1 டேபிள் ஸ்பூன்
வினிகர்-1 டேபிள் ஸ்பூன்
டோமட்டோ கெட்சப் -3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் ரீபண்ட் ஆயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். மாவு காயாமல் இருப்பதற்காக மாவு மீது சிறிது எண்ணெய் சேர்த்து தடவி இரண்டு மணி நேரம் ஊரை விட வேண்டும்.
பின்னர் ஸ்டஃபிங் தயாரிக்க ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், துருவிய கேரட் மற்றும் சோயா சாஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு பின்னர் அடுப்பை ஆஃப் செய்து இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.இப்போது ஸ்டஃபிங் தயாராகி விட்டது.
ஏற்கனவே தயார் செய்து வைத்த மைதா மாவினை பூரி போன்று சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை பூரி கட்டையில் வைத்து பூரி தயார் செய்ய உருட்டுவது போல உருட்டி எடுக்க வேண்டும். இதன் மத்தியில் தயார் செய்து வைத்த ஸ்டஃபிங்கை வைத்து மாவின் விழும்பினை ஒன்றன்பின் ஒன்றாக சேலைக்கு மடிப்பு எடுப்பது போன்று மடித்து இறுதியில் அழுத்தம் கொடுத்து ஸ்டஃபிங் வெளியே வராதபடிக்கு மாவை வைத்து மூடிவிட வேண்டும்.
இதேபோன்று அனைத்து மோமோசையும் தயார் செய்து இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து மோமோசை வைத்து அவித்து எடுக்க வேண்டும். அடுப்பு தீயை மீடியம் ஃபிளேமில் வைத்து 25 நிமிடம் வேக விட வேண்டும். இப்போது டேஸ்டியான வெஜ் மோமோஸ் தயார்.
மோமோஸ் சட்னி செய்ய ஒரு பாத்திரத்தில் தக்காளி, காஷ்மீரி மிளகாய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இந்த கலவை நன்கு ஆரிய பின் தண்ணீரோடு சேர்த்து மை போன்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து இதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதனுடன் சோயா சாஸ், வினிகர் மற்றும் டோமட்டோ கெட்சப் சேர்த்து ஐந்து நிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான மோமோஸ் சட்னி தயார். இந்த சட்னியை மோமோசுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : கோதுமை மாவு இருக்கா? நார்த் இந்தியன் ஸ்பெஷல் மால்புவா தயார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com