Budget 2026 : தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதல் முழுமையான பட்ஜெட்டில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Budget 2026 : தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதல் முழுமையான பட்ஜெட்டில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Published on: August 5, 2026 at 12:53 pm
சென்னை, ஆக. 5 2026: தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மேரி வில்சன் தாக்கல் செய்தார். இதில், மாணவர்களின் டிஜிட்டல் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்றும், அதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்தி கண்காணிக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் இளைஞர் நலனுக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறைக்காக வரலாறு காணாத வகையில் ரூ. 44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் தடையற்ற போக்குவரத்து வசதியை உறுதி செய்ய இருசக்கர மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலச் சந்தையின் தொழில்நுட்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக இளைஞர்களை சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதனையாளர்களாக மாற்றும் தொலைநோக்கு பார்வையில், மாநிலம் முழுவதும் ரூ.50 கோடி செலவில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
அத்துடன் தேசிய அளவில் சிறந்து விளங்கும் 500 விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற விளையாட்டுகளையும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் உலகறியச் செய்து ஊக்குவிக்கும் வகையில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறைக்காக ரூ.2,022 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ‘அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்’ மூலமாக வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.131 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘மண்ணின் மகள் திட்டம்’ செயலாக்கத்திற்கு ரூ.20 கோடியும், ‘அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு’ ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ‘ஆன்றோர் மேம்பாட்டு திட்டத்திற்கு’ ரூ.250 கோடி ஒதுக்கி, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் 2026-27 நிதி ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழக வெற்றிக் கழக முதல் பட்ஜெட்.. கல்விக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com