அமிதாப் பச்சனின் கேள்வி.. சீதை கதாப்பாத்திரத்தில் நடித்தது குறித்து மனம் திறந்த சாய்பல்லவி!
Sai Pallavi on Sita Role: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, அந்தக் கதாபாத்திரத்தை அணுகிய விதம் குறித்து மனம் திறந்துள்ளார். வழக்கமான சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு, பிரார்த்தனையுடன் சீதையின் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை, அக், 26 2026: நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் நடிகை சாய் பல்லவி, அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்ட அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
வழக்கமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அதற்குத் தன்னால் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பதாகக் கூறிய அவர், சீதையின் கதாபாத்திரத்தை ஏற்றபோது மட்டும் அந்த அனுபவத்தின் மூலம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று சிந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில், சாய் பல்லவி, ரன்பீர் கபூர் மற்றும் ரவி துபே ஆகியோர் பங்கேற்று ‘ராமாயணம்’ திரைப்படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது, சீதையின் கதாபாத்திரத்தை ஏற்றபோது தனது மனதில் என்ன தோன்றியது என்று அமிதாப் பச்சன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சாய் பல்லவி, சீதையாக நடிக்கும்போது தனது வழக்கமான சிந்தனை முறையை ஒதுக்கிவிட்டு, அந்தக் கதாபாத்திரத்திடமிருந்து கிடைக்கக்கூடிய ஞானத்தைப் புரிந்துகொள்ள விரும்பியதாகக் கூறினார். தனக்குத் தெரிந்த முன்முடிவுகளுடன் கதாபாத்திரத்தை அணுகாமல், மனதைத் திறந்த நிலையில் இருக்க விரும்பியதாகவும், சீதையிடம் பிரார்த்தனை செய்து, அந்தக் கதாபாத்திரத்தைத் தன் மூலம் வெளிப்படுத்துமாறு வேண்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
சாய் பல்லவியின் இந்த அணுகுமுறையைப் பாராட்டிய அமிதாப் பச்சன், அவர் கூறிய கருத்து மிகவும் சிறப்பானது என்று தெரிவித்தார். ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், லட்சுமணனாக ரவி துபேவும் நடிக்கின்றனர். நிதேஷ் திவாரி இயக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.