Anbumani Ramadoss | மதுவிலக்கும், சட்டம் ஒழுங்கும் மாநில அரசின் அதிகாரம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார்.
அமைச்சர் இரகுபதியின் பேச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் குரலாகத் தெரியவில்லை. மாறாக, மது ஆலை அதிபர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுவதைப் போல இருக்கிறது. மதுவுக்கு ஆதரவான சட்ட அமைச்சர் இரகுபதியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.
மு.க. ஸ்டாலின் பேச்சு என்னானது?
மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த காந்தியடிகள் பிறந்த நாளுக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றார். 2016-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று பா.ம.க.வின் கொள்கை முழக்கத்தை காப்பியடித்து மு.க.ஸ்டாலின் முழங்கினார்.
2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இப்போது அதற்கு முற்றிலும் எதிராக அமைச்சர் இரகுபதி பேசுகிறார். அப்படியானால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா, இரகுபதியா?
மதுஆலை அதிபர்களின் கஜானா
மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் இரகுபதி கூறுகிறார்.’’ பாதி கடையை மூடுங்கள்; பாதியை திறங்கள் என்றால், 1 கி.மீ., தூரம் சென்று குடியுங்கள் என்பது தான் அர்த்தம் என்பதால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது” என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பதையும், திமுகவைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களின் கஜானாக்களை நிரப்புவதற்காக மட்டும் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தோல்வியின் வெளிப்பாடு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலின் முதல் இடத்தில் சட்டம்&-ஒழுங்கு, பொதுஅமைதி ஆகியவையும், எட்டாவது இடத்தில் மது விலக்கும் உள்ளன. மக்கள் நலன் கருதி இவற்றை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை.
அதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு உள்ளன. அதனால் மதுவிலக்கை மாநில அரசுகள் தான் செயல்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் மது விலக்கு இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பது தோல்வியின் வெளிப்பாடு.
பதவி விலகுக
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச்சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான். அதற்கான வழிமுறைகளை பாட்டாளி மக்கள் கட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆவணமாக தயாரித்து வெளியிட்டுள்ளது.
திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
மாநில தன்னாட்சி கோரும் திமுக, உள்ளாட்சிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிப்பது என்ன வகை ஜனநாயகம் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்….
அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக வழங்கப்படாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்….
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திமுக தொடர்பு வெளிவராமல் தடுக்க துடிப்பது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்