Mekedatu Project : மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு மறைமுக ஆதரவு அளிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Mekedatu Project : மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு மறைமுக ஆதரவு அளிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: November 29, 2026 at 1:54 pm
திருச்சி, நவ. 29, 2026: கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு மறைமுகமாக ஊக்கம் அளித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழ்நிலை மாநிலங்களுக்குச் செல்லும் ஆற்று நீரைத் தடுக்கும் உரிமை எந்த மாநிலத்துக்கும் இல்லை என்றார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும், அதனை உறுதி செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் இதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளதாக வைகோ தெரிவித்தார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் தலையீட்டைத் தடுப்பதாகக் கூறியதற்குப் பின்னணியில் மத்திய பாஜக அரசின் ஆதரவு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக தலைவர் அனந்தகுமார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றதாக வைகோ கூறினார். அப்போது மேகதாது அணைக்கு வெளிப்படையாக அனுமதி வழங்காமல், கர்நாடகா அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் எனப் பேசப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், திட்டத்திற்கான ஆரம்பச் செலவு ரூ.5,900 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.9,000 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேகதாது அணைத் திட்டம் தடுக்கப்படாவிட்டால் காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் வேளாண் பகுதிகள் பாதிக்கப்படும் என எச்சரித்த வைகோ, இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாகக் கூறினார். தஞ்சாவூரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை என்றால் என்ன? மசோதா நிலுவையில் இருப்பது ஏன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com