டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக புரோ பட்டம் வென்று மாயா சாதனை.. சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க திட்டம்!

Maya: டென்னிஸ் போட்டியில் முதல் புரோ பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நிலையில், மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க மாயா திட்டமிட்டுள்ளார்.

Published on: October 13, 2026 at 1:36 pm

சென்னை, அக்.13, 2026: இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான கோயம்புத்தூரைச் சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் ரேவதி, தனது முதல் தொழில்முறை ஒற்றையர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகலின் லாகோஸ் நகரில் நடைபெற்ற ஐடிஎஃப் (ITF) W35 டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை செலியா செர்வினோ ரூயிஸை 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி மாயா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றுக்குள் நுழைந்த 17 வயதான மாயா, ஒற்றையர் பிரிவில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் இந்த வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம், 2004ஆம் ஆண்டில் சானியா மிர்சா தொழில்முறை ஒற்றையர் பட்டம் வென்றதற்குப் பிறகு, இந்த அளவிலான சாதனையைப் படைத்த இளம் இந்திய வீராங்கனையாக மாயா உருவெடுத்துள்ளார். மேலும், உக்ரைன் வீராங்கனை யெலிசவெட்டா கோட்லியாருடன் இணைந்து இரட்டையர் பிரிவிலும் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

தனது முதல் தொழில்முறை பட்டம் குறித்து பேசிய மாயா, இது தனது பயணத்தின் தொடக்கம்தான் என்றும், இந்த வெற்றி தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐரோப்பாவில் மேலும் பல தொழில்முறைப் போட்டிகளில் பங்கேற்று, மகளிர் ஒற்றையர் உலகத் தரவரிசையில் முன்னேறுவதே தனது தற்போதைய இலக்கு என்று கூறியுள்ளார்.

போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதுடன், தனது ஆட்டத்தின் மீது அதிக நம்பிக்கை வைக்கவும், நெருக்கடியான தருணங்களில் தன்னம்பிக்கையுடன் விளையாடவும் இந்த வெற்றி உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய டென்னிஸின் முன்னாள் நட்சத்திரமான சானியா மிர்சாவைத் தனது முன்மாதிரியாகக் கருதும் மாயா, அவரை எவராலும் எளிதில் மிஞ்ச முடியாது என்றும், இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டின் மீதான கவனத்தை அதிகரித்ததில் சானியாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதற்கிடையே, தனது பயிற்சி மையத்தையும் மாயா மாற்றியுள்ளார். ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால் அகாடமியிலிருந்து விலகிய அவர், பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள எலைட் டென்னிஸ் சென்டரில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். அந்த மையத்தின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஜீன்-ரெனே லிஸ்னார்டின் வழிகாட்டுதலின் கீழ் லாகோஸ் தொடரில் பங்கேற்றார்.

வரும் மாதங்களில் உடற்தகுதியை மேம்படுத்துதல், ஆட்ட நுட்பங்களில் மாற்றங்கள் செய்தல், காயங்களைத் தவிர்த்தல் மற்றும் மைதானத்தில் வேகமாகச் செயல்படும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்று, தொழில்முறைப் போட்டிகளிலும் தனது அனுபவத்தை அதிகரிக்க உள்ளார். தனது முதல் பட்டத்தை இறுதி இலக்காகக் கருதாமல், உலகத் தரவரிசையில் முன்னேறுவதற்கான தொடக்கமாகவே பார்க்கும் மாயாவின் அடுத்தகட்ட ஆட்டங்கள் இந்திய டென்னிஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க : ஸ்மிருதி மந்தனா-வை தேடிவந்த கௌரவம்.. யுனிசெஃப் இந்திய தூதராக நியமனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com