மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் தவெக முன்னிலை!
Madhuranthakam By-Elections: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவும் முன்னிலை பெற்றுள்ளனர்.
சென்னை, அக். 9 2026: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (அக்டோபர் 9) வெளியாகி வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியமான அரசியல் சோதனையாகப் பார்க்கப்படுகின்றன. இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் எஸ். கனிதா சம்பத், திமுக சார்பில் ஐ. பரந்தாமன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கச் சுற்றில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை பெற்றார். முதல் சுற்றில் அவருக்கு 3,571 வாக்குகளும், திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு 2,611 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு 2,078 வாக்குகளும் கிடைத்ததாகத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 9வது சுற்று முடிவில், தவெக 35078 வாக்குகளும், திமுக 23175 வாக்குகளும், அதிமுக 19586 வாக்குகளும் நாதக 1069 வாக்குகளும் பெற்றுள்ளது.
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா, திமுக வேட்பாளர் எஸ். சுகன்யா, அதிமுக வேட்பாளர் கே. பானுமதி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடக்கச் சுற்றுகளில் அதிமுக முன்னிலை பெற்றிருந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக முன்னிலை பெற்றது. தினத்தந்தி வெளியிட்ட 13-வது சுற்று நிலவரப்படி, தவெக வேட்பாளர் சத்தியபாமா 37,944 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 31,043 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 26,266 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன்படி, தாராபுரத்தில் தவெக 6,901 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 80.25 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மதுராந்தகத்தில் 27 வேட்பாளர்களும், தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரு தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் தொடர்கிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.