புதுடெல்லி, ஆக. 15, 2026: இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த லட்சக்கணக்கான தியாகிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய அவர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேசம் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதே நாட்டின் மிகப்பெரிய இலக்கு என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தியர்களின் கனவுகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், பெரிய இலக்குகளை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் தற்சார்பு அடைவது அவசியம் என்று கூறிய பிரதமர், உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். இந்தியாவில் மிகப்பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வலிமையை மேலும் உயர்த்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாடு முழுவதும் குடிநீர் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். உற்பத்தி, தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்துக்கள் vs பௌத்தர்கள்.. மகாபோதி கோவிலில் யாருக்கு உரிமை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்