புதுடெல்லி, செப்.25, 2026: இந்தியாவின் மின்துறை வளர்ச்சி புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மின் உற்பத்தி, பரிமாற்றம், சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திட்டமிடுவதுடன், உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய மின்துறை செயலாளர் பங்கஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற 2-வது இந்திய மின்துறை மாநாட்டில் பேசிய அவர், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் புதிய தேசிய மின்சாரக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 2005-ஆம் ஆண்டின் முந்தைய கொள்கையுடன் ஒப்பிடும்போது, தற்போது மின்வலையமைப்பு மேலாண்மை, போதுமான மின் பரிமாற்ற கட்டமைப்பு மற்றும் நிதி ரீதியாக நிலையான, தொழில்நுட்பத் திறன் கொண்ட விநியோக நிறுவனங்கள் முக்கிய சவால்களாக உள்ளதாக கூறினார்.
மின்துறையை தனித்தனி பிரிவுகளாக பார்க்காமல், ஒருங்கிணைந்த அமைப்பாக அணுக வேண்டும் என்றும் பங்கஜ் அகர்வால் வலியுறுத்தினார். எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான வளங்கள் மட்டுமின்றி, அவற்றுக்கு ஏற்ற தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகளையும் உருவாக்குவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
மின்துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை இந்தியாவிலேயே வடிவமைத்து, மேம்படுத்தி, உற்பத்தி செய்யும் திறனை வளர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல், ஆட்டோமேஷன், மேம்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள், எஸ்.சி.ஏ.டி.ஏ (SCADA), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட துறைகளில் உள்நாட்டு திறன்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மத்திய மின்சார ஆணையத் தலைவர் கன்ஷ்யாம் பிரசாத் பேசுகையில், நம்பகத்தன்மையை உறுதி செய்தபடியே மின்துறையின் எரிசக்தி மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார். மின் தேவை மற்றும் உற்பத்தியில் அதிக மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதைபடிவமற்ற எரிசக்தியை மின்வலையமைப்பில் அதிகளவில் இணைக்க புதுமையான தீர்வுகளும் திட்டமிட்ட அணுகுமுறையும் தேவை என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஆந்திர மாநில வளர்ச்சித் திட்டம்.. நாரா லோகேஷ் வெளியீடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்