Vaiko: “தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் அச்சத்தைப் போக்கி எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Vaiko: “தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் அச்சத்தைப் போக்கி எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Published on: August 10, 2026 at 3:28 pm
சென்னை, ஆக.10, 2026: ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர் .
இலவம் பஞ்சு, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடுவது என விவசாயமே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இப்பகுதி 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகும். இந்தப் புலிகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 1,01,657.13 ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புலிகள் காப்பகம் விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூர் ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “வன உரிமைகள் சட்டத்தின்படி (2006), 13 டிசம்பர் 2005-க்கு முன்பாக வனப்பகுதிகளில் குடியிருந்த பழங்குடியினர் அல்லது குறைந்தது மூன்று தலைமுறைகளாக (அதாவது 75 ஆண்டுகளாக) வனப்பகுதிகளிலேயே வாழ்ந்து, வனத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பிற பாரம்பரிய வனவாழ் மக்கள் சில உரிமைகளைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
நில உரிமை கோரும் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, உரிமைகளை அங்கீகரிக்கும் நடைமுறைகள் முழுமையாக முடிவடையும் வரை, வனப்பகுதியில் வசிக்கும் எந்தவொரு நபரையும் அவர் வசிக்கும் வன நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது என இச்சட்டம் (பிரிவு 4) உத்தரவாதம் அளிக்கிறது.
வனப்பகுதியில் வாழும் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளான பள்ளிகள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் போன்ற அரசு மேம்பாட்டுப் பணிகளுக்காக வனப்பகுதிகளை (ஒரு திட்டத்திற்கு 1 ஹெக்டேருக்கு மிகாமல்) பயன்படுத்திக்கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது.
எனவே தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்.
தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் அச்சத்தைப் போக்கி எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஆவின் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்திடுக.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com