சென்னை, ஆக.10, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாள்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது.
ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப் பட்டு வந்தது. சென்னையில் மட்டும் தினமும் 16 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் 20% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், “ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாதது தான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின் நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.
ஆனால், ஆவின் நிறுவனமும், அரசும் இதை உணரவில்லை. ஆவின் பால் கொள்முதல் குறையவில்லை என்றும், கோடை வெப்பத்தால் குறைந்த அளவு மட்டும் தான் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் காரணம் கூறி வருகிறது. இந்த மாயையில் இருந்து தமிழக அரசு மீள வேண்டும். ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைக்குமா?.. தமிழக அரசின் மனு ஆகஸ்ட் 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்