புதுடெல்லி, ஜூலை 25 2026: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிட்டு கடந்த 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை, காக்ரோச் ஜனதா கட்சி உடனடியாக வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்தது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சி.ஜே.பி. செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா, அரசின் உறுதிமொழியை நம்பி நல்லெண்ண அடிப்படையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட காவல் வழக்குகள் (FIR) வாபஸ் பெறப்படும் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் மத்திய அரசு உறுதியளித்ததாக அவர்கள் கூறினர்.
மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நடைமுறைகளின்படி அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளதாக சி.ஜே.பி. தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட அனைத்து போராட்டக் களங்களிலும் இருந்த ஆதரவாளர்கள் அமைதியான முறையில் வீடு திரும்புமாறு சவுரவ் தாஸ் கேட்டுக் கொண்டார்.
“36 நாட்கள் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு எங்களது அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுள்ளது. எனவே அனைவரும் அமைதியாக போராட்டத்தை முடித்து வீடு திரும்ப வேண்டும்” என்று அசுதோஷ் ரங்காவும் தெரிவித்தார். இதன் மூலம், நாடு முழுவதும் கவனம் ஈர்த்த நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் முக்கிய கட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்