Vanathi Srinivasan | ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கருணாநிதி ஆதரவு அளித்துள்ளார்.“ஜனநாயக ஒற்றுமை” என்றால் உங்களுக்கு என்ன ஒவ்வாமையா? என மதுரை எம்.பி சு. வெங்கடேசனுக்கு வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பி உள்ளார்.
Vanathi Srinivasan | ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கருணாநிதி ஆதரவு அளித்துள்ளார்.“ஜனநாயக ஒற்றுமை” என்றால் உங்களுக்கு என்ன ஒவ்வாமையா? என மதுரை எம்.பி சு. வெங்கடேசனுக்கு வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பி உள்ளார்.
Published on: September 20, 2024 at 1:55 pm
Vanathi Srinivasan | மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விமர்சித்து இருந்தார். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் 400 சீட் பகல் கனவு கலைந்தது போல் இதுவும் கலையும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ““ஜனநாயக ஒற்றுமை” என்றால் உங்களுக்கு என்ன ஒவ்வாமையா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
தொடர்ந்து, “நாட்டின் ஜனநாயக ஒற்றுமையைப் பாதுகாக்கவும், நேரவிரயம் மற்றும் நிதி விரயத்தைக் குறைக்கவும், தேர்தலின் போது கட்டுக் கட்டாக கருப்புப்பணம் செலவிடப்படுவதை முறியடிக்கவும், தேர்தல் பிரச்சாரத்தினால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபடுவதை தவிர்க்கவும், அதிகளவிலான வாக்குப் பதிவை ஊக்குவிக்கவும் நமது மத்திய அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தைக் கண்டு நீங்கள் எதற்காக இத்தனைப் பதட்டப்படுகிறீர்கள் எனப் புரியவில்லை.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே தேர்தலாக பல மாநிலங்களில் நடந்த போதிலும் மற்றும் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், அத்தேர்தல்களில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் மாறி மாறி தான் வெற்றி பெற்றுள்ளனவே தவிர, இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. எந்த ஜனநாயக உரிமையும் பறிக்கப்படவில்லை.
மேலும், இது நமது நாட்டில் 1967 வரை நடைமுறையில் இருந்த ஒரு திட்டம் என்பதும், நீங்கள் பெருமதிப்பு கொண்டுள்ள மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்களே, “ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களை சந்தித்து வருவதால், ஆட்சி இயந்திரம் பாதிக்கப்படும், எனவே, ஒருங்கிணைந்த தேர்தலை நடத்துவது தான் பொருத்தமானது” என்று இத்திட்டத்தை ஆதரித்து தனது “நெஞ்சுக்கு நீதி” புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் ஊரறிந்த உண்மை.
அவ்வாறான இத்திட்டத்தை “நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும்” என்று நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் ஆதாரமற்றது. எனவே, 400 சீட்டுகளை இலக்காக வைத்து 240 சீட்டுகளில் வெற்றி பெற்று, மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ள எங்களைப் பற்றி, வெறும் 2 சீட்டுகளுக்காக மற்றொரு கட்சியின் தயவை நம்பியுள்ள நீங்கள் விமர்சிப்பது, “எரிகிற வீட்டிலிருந்துகொண்டு, எதிர்த்த வீட்டுக்காரரை இளக்காரம் செய்த கதை” போன்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க : ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மக்கள், நாட்டு நலன்; போலித் தகவல்களை நம்ப வேண்டாம்’: சரத் குமார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com