தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படும் வரி பகிர்வை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படும் வரி பகிர்வை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
Published on: November 20, 2024 at 10:38 am
VK Sasikala | வி கே சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை தமிழ்நாட்டிற்கு குறைத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு வரிப்பகிர்வு கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் நிதியானது, மத்திய அரசிடம் சென்ற பிறகு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மாநிலங்களின் பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, நிதி கமிஷன் நிதிப் பகிர்வைச் செய்கிறது. இந்த நிதிப் பகிர்வை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிதி ஆணையங்கள் தரும் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசும் மாநில அரசுகளும் நிதியைப் பகிர்ந்துகொள்கின்றன.
1971க்கு பிறகு மக்கள்தொகையை முறையாக கட்டுப்படுத்திய மாநிலங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடும், வரிப்பகிர்வுகளும் செய்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தினார்கள். இதன் அடிப்படையில் தான் நடைமுறையில் உள்ள 15வது நிதி ஆணையத்தில் தமிழகத்திற்கு இந்த அளவிலாவது வரிப்பகிர்வு கணக்கிடப்படுவதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று தமிழகம் சிறப்பாக செயல்பட்டபோதும் மாநிலத்திற்கான வரிப்பகிர்வை குறைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை.
எனவே, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வினை 41 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகித அளவிற்காவது உயர்த்தி அளிக்கவேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் 15வது நிதிக் குழு முதன்முறையாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை மட்டும் எடுத்துக்கொண்டு பரிந்துரைக்கப்பட்டது. எனவே, 15வது நிதி ஆணையத்தால் கைவிடப்பட்ட 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையையும் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்றும், மக்கள்தொகை காரணிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை இந்த 16வது நிதி ஆணையத்தில் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்; தமிழக அரசு அனுமதிக்க கூடாது: அன்புமணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com