சென்னை, ஏப்.19 2025: உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில், “மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்டு, இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்து, கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டார்.
மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, “இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. அதுபோலவே, ஈழத்திலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அதிமுக பாஜக கூட்டணியால் மு.க ஸ்டாலினுக்கு பதட்டம்.. அவுட் ஆஃப் கண்ட்ரோல்.. தமிழிசை விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்