Chola Treasures Surface in Kollidam: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால கட்டிட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Chola Treasures Surface in Kollidam: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால கட்டிட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Published on: August 10, 2026 at 5:57 pm
திருச்சி, ஆக.10, 2026: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால கட்டிட எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கூகூர் கிராமம் அருகே ஆற்றின் கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், ஆற்றின் நடுவே செங்கல் சுவர்களாலான கட்டிட அமைப்புகள் வெளிப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்குக்குப் பிறகு உருவான பள்ளங்களில் தேங்கி இருந்த நீர் வற்றியதால், இக்கட்டிட எச்சங்கள் தெளிவாகக் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.
சுமார் 15 கிலோ எடையுடைய, 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள் களிமண் பூச்சு கொண்டு பிணைக்கப்பட்டுள்ளன. இவை சாதாரண செங்கற்களை விட 5 மடங்கு பெரியதாகவும், சிலவற்றில் ‘ய’ வடிவ குறியீடுகளும் காணப்படுகின்றன. கட்டிடச் சுவர்களுடன் சேர்த்து பழங்கால கல் தூண்கள், ஆழமாகச் செல்லும் தூண் பகுதிகள், தடிமனான கருப்பு நிறப் பானைகள் மற்றும் மண்பாண்ட எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இடம் சோழர் காலத்தில் கரிகால் சோழன் கட்டிய கல்லணையுடன் தொடர்புடைய அமைப்பாகவோ, படகுத் துறையாகவோ, வழிபாட்டுத் தலமாகவோ, படைவீரர்கள் தங்கும் முகமாகவோ அல்லது அரண்மனை அமைப்பாகவோ இருந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். தஞ்சாவூர் கோட்டைமேடு மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலச் செங்கற்களுடன் இவை ஒத்துப்போவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கூகூர் கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, லால்குடி வருவாய் வட்டாட்சியர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் பெரும்பகுதி ஆற்றின் நீருக்குள்ளும் மணலுக்குள்ளும் புதைந்துள்ளதால், பழமையான இந்த வரலாற்றுச் சின்னங்கள் சேதமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால், தமிழ்நாடு தொல்லியல் துறை உடனடியாக தலையிட்டு, தனிக்குழு அமைத்து உரிய அகழாய்வு மற்றும் அறிவியல்பூர்வ சோதனைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும் என கூகூர் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com